இலங்கையில் வங்கி அல்லாத நிதியியல் சேவைகள் துறையில் முன்னணி செயல்பாட்டாளரான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், மற்றுமொரு கிளையை சமீபத்தில் பிலியந்தலையில் ஆரம்பித்து வைத்து, தனது கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு முயற்சியை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. இலக்கம் 64/1, ஹொறணை வீதி, பிலியந்தலை என்ற முகவரியில் இப்புதிய கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் அதன் 31 ஆவது கிளையாக அமைந்துள்ள இது, மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் மற்றுமொரு சாதனை இலக்காக மாறியுள்ளது.
இலங்கையில் பரந்துபட்ட சமூகங்கள் மத்தியில் வளர்ச்சிக்கு வித்திட்டு, அவர்கள் அணுகக்கூடிய வகையில் நிதியியல் தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் அர்ப்பணிப்பை இந்த மூலோபாய விஸ்தரிப்பு நடவடிக்கை பிரதிபலிக்கின்றது. தான் சேவைகளை வழங்குகின்ற மக்களுக்கு அருகில் சென்று தனது நிதியியல் சேவைகளை வழங்க வேண்டும் என்ற மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் இலக்கிற்கு அமைவாக, அதன் கிளை வலையமைப்பில் தற்போது பரபரப்புடன் இயங்கும் ஒரு வர்த்தக புறநகரமான பிலியந்தலையில் ஆரம்பித்து இப்புதிய கிளையும் இணைந்துள்ளது.
பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவர் திரு. அரவிந்த டி சில்வா அவர்கள் இவ்விஸ்தரிப்பு நடவடிக்கை குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில், “வலுவூட்டுதல் மற்றும் பகிரப்பட்ட சுபீட்சம் என்பதை நோக்கியே எமது பயணம் அமைந்துள்ளது. பிலியந்தலையில் திறக்கப்பட்டுள்ள எமது புதிய கிளையானது இலங்கை மக்கள் அனைவருக்கும் பிரகாசமான நிதியியல் எதிர்காலத்தைத் தோற்றுவிப்பதில் நாம் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பிற்கு சான்றுபகருகின்றது. பிலியந்தலை ஒரு முக்கியமான புறநகரமாகவும், வணிகம் மற்றும் கைத்தொழிலுக்கான மையமாகவும் காணப்படுகின்றது. இந்த வகையில் அங்குள்ள சமூகத்தை வரவேற்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் எமது கதவுகளை ஆரம்பித்து வைத்துள்ளதுடன், இப்பிராந்தியத்திலுள்ள வளர்ந்துவருகின்ற திறமைசாலிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கும் அதேசமயம், ஒப்பற்ற வகையில், விசுவாசம் மிக்க வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
மோட்டார் வாகனங்கள், தங்கக் கடன்கள், துரித வரைவுகள் மற்றும் பல அடங்கலாக, மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பரந்துபட்ட கடன் வழங்கல் வரிசையானது, கிராம மற்றும் அரை நகரப் பிரிவுகளில் அது தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றமைக்கு சான்றாக உள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்ட உலகளாவிய நிதியியல் சேவைகள் பெருநிறுவனமான மஹிந்ரா அன்ட் மஹிந்ரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட்டின் ஒரு துணை நிறுவனமாக இயங்குகின்ற மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் இலங்கையில் அனைவரையும் நிதியியல் ரீதியாக அரவணைப்பதை மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
பிலியந்தலைக்கு அதன் கிளை தற்போது புதிதாக விஸ்தரிக்கப்பட்டுள்ளமை, நாட்டில் முக்கியமான நகர்புறங்களில் வலுவான கிளைகளைக் கொண்ட வலையமைப்பினைக் கட்டியெழுப்பி, நிலைபேணத்தகு வளர்ச்சிக்கான பேராவல் கொண்ட மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் திட்டங்களுடன் தெளிவாக ஒத்திசைகின்றது. வங்கிச்சேவை, நிதி மற்றும் காப்புறுதித் துறையில் தனித்துவமான அங்கீகாரமாக, தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக Great Place to Work என்ற அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை அடங்கலாக நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பலவற்றுக்கு மத்தியில் இந்த மூலோபாய நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் தொடர்பான விபரங்கள்
மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் நிறுவனம், Fitch Ratings Lanka இருந்து “AA-(lka) Outlook Stable” என்ற தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன், தொடர்ந்து 4 ஆண்டுகளாக “Great Place to Work” என்ற பட்டத்தையும் சம்பாதித்துள்ளது. நிறுவனத்தின் வரவேற்புடனான வெளிப்படையான கலாச்சாரம், இயங்கு வலிமை மற்றும் மாறுகின்ற சந்தைச் சூழ்நிலைகளுக்கேற்ப வேகமாக தன்னை மாற்றிக் கொள்ளும் தகவமைப்புத்திறன் ஆகியன 2022 ஆம் ஆண்டில் “Great Place to Work for Millennials” என்ற பட்டத்தையும் சம்பாதிப்பதற்கு வழிகோலியிருந்தது. மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் ஆனது இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனமாக இயங்கி வருவதுடன், கிராமிய மற்றும் அரை நகர்ப்புறங்களில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. தங்கக் கடன்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளுக்கான கடன்கள், மோட்டார் கார்கள், முச்சக்கர வண்டிகள், விவசாயப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்களுக்கு துரித வரைவு குத்தகை வசதிகள் ஆகியன அதன் கடன் வழங்கல் வரிசையில் அடங்கியுள்ளன. இந்நிறுவனம் உயர் தர கடன் வரிசையைப் பேணி வருவதுடன், தொடர்ச்சியான நிலைபேணத்தகு வருடாந்த வளர்ச்சியையும் பதிவாக்கி வருகின்றது.