இலங்கையில் ஆதனத் துறையில் முக்கியமானதொரு கூட்டாண்மையாக அமையும் வகையில் John Keells Properties உடன் மூலோபாயக் கூட்டாண்மையொன்றை DFCC வங்கி ஏற்படுத்தியுள்ளது. Viman Ja-Ela குடியிருப்பு செயற்திட்டத்தில் வீடுகளை வாங்க விரும்புகின்றவர்களுக்கு வீட்டுக் கடன் அனுபவத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் வகையில் இந்த கூட்டாண்மை காணப்படுகின்றது.
தனித்துவமான குடியிருப்பு வசதிகளை நிர்மாணிப்பதில் சந்தை முன்னோடியாக, சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள John Keells Properties மற்றும் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்ற புத்தாக்கமான நிதித் தீர்வுகளை வழங்கும் DFCC வங்கி ஆகிய இரு நிறுவனங்களினதும் கூட்டுப்பலத்தின் அடிப்படையில் இக்கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 13.5% முதற்கொண்டு சந்தையில் சிறப்பான வட்டி வீதம், நெகிழ்வுத்தன்மை கொண்ட ஆரம்பக் கொடுப்பனவுத் தேவைப்பாடுகள் மற்றும் தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவம் அடங்கலாக, குடியிருப்புக்களைக் கொள்வனவு செய்கின்றவர்கள் பல்வேறுபட்ட பிரத்தியேகமான வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியும். இலங்கை மக்கள் மத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை தீர்த்து வைக்கின்ற, தங்குதடையின்றிய, வெகுமதியளிக்கும் குடியிருப்பு கொள்வனவு அனுபவத்தை வழங்குவதே இக்கூட்டாண்மையின் முதன்மையான நோக்கமாகும்.
DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும், தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிப் பிரிவுக்கான தலைவருமான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் உற்சாகத்துடன் கருத்து வெளியிடுகையில், “சொந்தமாக குடியிருப்பொன்றைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிதியியல் தேவைப்பாடுகளின் ஆழத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கின்றோம். குடியிருப்புக்களைக் கொள்வனவு செய்கின்றவர்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் வீட்டுக்கடன்களுக்கு கவர்ச்சியான வட்டி மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட மீள்கொடுப்பனவு முறைமைகள் அடங்கலாக, நெகிழ்வுத்தன்மை கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதற்கு John Keells Properties உடனான இந்த ஒத்துழைப்பு எமக்கு இடமளிக்கின்றது. நம்பகத்தன்மை, திறன் மற்றும் தங்குதடையின்றிய சேவை ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற எமது தனித்துவமான வாடிக்கையாளர் சேவையின் கீழ் ஒட்டுமொத்த நடைமுறையிலும் புரட்சிகரமான மாற்றத்துடன், வீடொன்றைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கு உதவுவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.
John Keells Properties உடனான இக்கூட்டாண்மையின் கீழ், Viman Ja-Ela செயற்திட்டத்தில் குடியிருப்புக்களைக் கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்களுக்கு இரண்டு வகையான பிரத்தியேக கடன் வழங்கல் தெரிவுகளை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவதாக, மொத்த கொள்வனவுத் தொகையில் 25% ஐ முதலில் செலுத்தி, எஞ்சிய 75% தொகையை அதிகபட்ச கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும். இரண்டாவதாக, ஒரு திட்டமிடப்பட்ட கொடுப்பனவு முறையாக, 10% ஐ முதலில் செலுத்தி, 70% தொகையை வங்கியிடமிருந்து பெற்று, மீதி 30% ஐ ஒவ்வொரு பாகமாக வாடிக்கையாளர் செலுத்த முடியும். இந்த திட்டமிடப்பட்ட கொடுப்பனவு முறைமையின் கீழ் குடியிருப்புத் தொகுதி கையளிக்கப்படும் வரை மூலதனத்துக்கான மீள்கொடுப்பனவுக்கு மன்னிப்புக்காலமும் வழங்கப்படுகின்றது. நிர்மாணம் இடம்பெறும் காலப்பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் மூலதனத்தில் 10% தொகையும் அதற்கான வட்டிக் கொடுப்பனவுகளையும் மாத்திரமே செலுத்த வேண்டி ஏற்படும். மேலும், முதலுக்கான கொடுப்பனவை வருடந்தோறும் மொத்தத் தொகையாக செலுத்தி, கடனில் 50% ஐ கடைசித் தவணைக்கொடுப்பனவாக செலுத்துவதன் மூலமாக, நிதியியல் ரீதியாக சமாளிக்கக்கூடிய ஒரு அணுகுமுறையை உறுதிசெய்கின்றது. அத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கு அமைவாக வீட்டுக்கடன்களை திட்டமிட்டு, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு DFCC வங்கியின் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
John Keells Properties இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உப தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எதிலும் சிறந்தவற்றையே நாடுகின்ற எமது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கொள்வனவு அனுபவத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் வகையில் DFCC வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். Viman செயற்திட்டத்தில் குடியிருப்புக்களை வாங்க விரும்புகின்றவர்களுக்கு நெகிழ்வுப்போக்குடனான வீட்டு அடமானத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஒத்துழைப்பு இடமளிப்பதுடன், இலங்கையின் ஆதனத் துறையில் ஒரு புதிய தர ஒப்பீட்டு நியமமாகவும் மாறியுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற இச்செயற்திட்டத்தில் வீடொன்றைக் கொள்வனவு செய்யும் ஒட்டுமொத்த அனுபவத்தை இந்த எளிமையான கடன் தெரிவுகள் மேம்படுத்துகின்றன,” என்று குறிப்பிட்டார்.
ஜா-எல நகரின் மத்தியில் நவீன வாழ்க்கைமுறைக்கு வழிகோலவுள்ள Viman குடியிருப்பு செயற்திட்டம், பாதுகாப்பான, குடும்பத்திற்கு உகந்த சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிறு நகரத்தின் இயல்புகள் மாறாது அவற்றை அனுபவிக்கவும் வழிவகுக்கின்றது. பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் அடங்கலாக அனைத்து வசதிகளையும் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் இலகுவான அணுகலை குடியிருப்பாளர்கள் கொண்டுள்ளார்கள். அந்த வகையில், DFCC வங்கி மற்றும் John Keells Properties இடையிலான ஒத்துழைப்பு, வீட்டைக் கொள்வனவு செய்யும் அனுபவத்தை மாற்றியமைத்து நவீன இலங்கையர்களின் மாறிவருகின்ற தேவைகளுடன் ஒன்றியவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கடன் தெரிவுகளை வழங்குகின்றது. வீடொன்றைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவைச் சுமக்கின்றவர்களின் வாழ்வை வளப்படுத்தி, இலங்கையின் ஆதனத்துறையில் புதிய தரநிலையை ஏற்படுத்தும் வகையில் இக்கூட்டாண்மை அமைந்துள்ளது.