திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளில் பொதுமக்களின் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான மூன்று நாள் செயலமர்வு பொலன்னறுவையில் இடம்பெற்றது.
இளைஞர் சமூகம், சிவில் சமூகம், வியாபார சமூகம், மாணவர் சமூகம் உள்ளிட்ட தரப்பினர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளிடம் நேரடியாக கேள்வி கேட்க சந்தர்ப்பம்.
இரகசிய வாக்கெடுப்பில் சபாநாயகர் தெரிவு உள்ளிட்ட மாணவர் பாராளுமன்ற அனுபவம் பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு.
இந்தச் செயலமர்வின் மூலம் ஜனநாயகத்தின் எண்ணக்கரு, பாராளுமன்றத்தின் வகிபாகம், செயற்பாடு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வகிபாகம் தொடர்பில் திறந்த பாராளுமன்றம் என்ற எண்ணக்கருவின் ஊடாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், மஞ்சுளா திசாநாயக ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இச்செயலமர்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதான உரை நிகழ்த்தினார்.
இங்கு பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் அவர்களிடம் நேரடியாக கேள்விகளை கேட்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
டிசெம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், 16 ஆம் திகதி இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர். திறந்த பாராளுமன்றத்தின் பங்கு, சட்டமூலங்களை நிறைவேற்றுதல், குழுக்களின் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும், அவர்களின் கருத்துக்களை மக்கள் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் இங்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
17ஆம் திகதி வர்த்தக சமூகம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொலன்னறு மாவட்ட சிவில் அமைப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்டதுடன், பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்ட சிவில் அமைப்புச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து திறந்த பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் சட்டங்களை நிறைவேற்றுவது, குழுக்களின் செயற்பாடுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.
கடந்த 18ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கொண்டு செயலமர்வு இடம்பெற்றது. அங்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் சபாநாயகரை தெரிவு செய்து பாராளுமன்றத்தின் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்த நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்குக் கிடைத்தது.
இச்செயலமர்வில் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் (பதில்) எச்.ஈ.ஜனகாந்த சில்வா, தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் புத்திக நவகமுவ, நிர்வாகத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கமல் உடபொல, உதவி ஹன்சார்ட் ஆசிரியர் நூஷா வீரசிங்க, தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு முகாமையாளர் புத்தினி ராமநாயக்க, பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரிகள் மற்றும் ஊடக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.