இலங்கை தூதுக்குழுவினர் இந்திய மக்களவை சபாநாயகரைச் சந்தித்தனர்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் இந்திய மக்களவை சபாநாயகரைச் சந்தித்தனர்.

🔸 இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் மாநிலங்கள் அவையின் தலைவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லாவை அண்மையில் சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே காணப்படும் நெருங்கிய உறவுகளை தொடர்ந்தும் வலுவான முறையில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்திய சபாநாயகர் வலியுறுத்தினார். அத்துடன், தற்போதைய பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்குத் தொடர்ந்தும் பலமாக இருப்போம் என்றும் இந்திய மக்களவை சபாநாயகர் உறுதியளித்தார்.

இலங்கை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது. இலங்கைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள சகல விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு தெரிவித்தார். இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா வசதிகளைத் துரிதப்படுத்துவது தொடர்பிலும், இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த நாட்டில் வெங்காய விலை பாரியளவில் அதிகரித்துள்ளமைக்கான தீர்வொன்றை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்திய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்தார். இலங்கையில் முதலீடு செய்வதற்கு இந்திய முதலீட்டாளர்கள் பலர் ஆவலுடன் இருப்பதாகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் இந்நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளான போது, இலங்கையின் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார். கடந்த மூன்று வருடங்களில் வழங்கப்பட்ட 550 மில்லியன் இந்திய ரூபா கடன் தொகையை செலுத்துவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் அவகாசம் வழங்கியமைக்காகவும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நன்றி தெரிவித்தார். அது மாத்திரமன்றி, ஏனைய நாடுகளை விட இலங்கையின் உண்மையான நட்பு நாடு என்ற ரீதியில் இந்திய வழங்கிய சகலவிதமான ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் தனது பாராட்டையும், நன்றியையும் வெளிப்படுத்தினார்.

சபாநாயகர் தலைமையிலான குழுவினர் மாநிலங்களவைத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் கௌரவ ஜகதீப் தங்கர் அவர்களையும் சந்தித்தனர். இந்த சந்திப்புக் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாநிலங்களவைத் தலைவர், இலங்கையிலிருந்து இதுபோன்றதொரு தூதுக்குழு ஐந்து வருடங்களின் பின்னர் இணைந்திருப்பதாகத் தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள ஆழமான உறவை மேலும் பாதுகாத்துப் பேணுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இரு நாட்டின் மீன்பிடித்துறையினர் கடல் எல்லையைத் தாண்டுவது உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் விடயமல்ல, மீனவர்களைக் கைதுசெய்யும்போது இரு நாடுகளும் நெகிழ்வான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் மாநிலங்களவைத் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ வருண லியனகே, கௌரவ வீரசுமண வீரசிங்ஹ, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ உதயகுமார், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரிகளும் இந்தக் குழுவில் இணைந்துகொண்டுள்ளனர்.

#SLparliament#lka#SriLanka🇱🇰#India🇮🇳#9thParliamentLK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *