இலங்கை – மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி அண்மையில் (12) தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை – மியான்மர் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யூ. ஹான் தூ (U. Han Thu) இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத்குமார சுமித்ராரச்சி, காமினி வலேபொட மற்றும் கருணாதாஸ கொடிதுவக்கு ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இதன் செயலாளராக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவு செய்யப்பட்டதுடன், உதவிச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய மற்றும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இலங்கை மற்றும் மியன்மாருக்கிடையில் மத அடிப்படையிலும் கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைகளில் நீண்ட தொடர்பு உள்ளதாகவும், இந்த நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதன் மூலம் அந்தத் தொடர்புகள் மேலும் வலுப்பெறுவதாகத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மியான்மாருக்கிடையில் முறியாத தொடர்பு காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யூ. ஹான் தூ (U. Han Thu) தெரிவித்ததுடன், மியான்மருக்கு சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய இலங்கை – மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி குறிப்பிடுகையில், நட்புறவுச் சங்கத்தின் தலைவராக தன்னைத் தெரிவு செய்தமை தொடர்பில் நன்றியைத் தெரிவித்ததுடன், இது இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும் எனக் குறிப்பிட்டார்.