பள்ளிக்கரணை, துரைப்பாக்கத்திற்கு வீடு வீடாக போன நடிகர் பாலா.. என்ன மனுசன் சார் இவரு..
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கி உள்ளார்.
ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு, ரூ.2 லட்சம் செலவில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக நடிகர் பாலா வழங்கினார்.
சின்னத்திரையில் தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்த நடிகர் பாலா, பிரபல தனியார் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின்னர் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் புகழ் பெற்றார். தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் பாலா, தன்னிடம் உள்ள பணத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுவரை 4 ஆம்புலன்ஸை உணர்வுகள் அறக்கட்டளையிடம் வழங்கினார்.
இதுபற்றி பாலா அப்போது பேசும் போது , அறந்தாங்கி, குன்றி, சோலைகனை கிராமத்தை தொடர்ந்து இந்த அம்புலன்ஸ் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு கொடுத்துள்ளோம். சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் சாலையோர மக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு தாய் மக்கள். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது சந்தோஷமாக பிறக்க வேண்டும். ஆனால் இறந்து போகும்போது நிம்மதியாக போக வேண்டும். அவர்களுக்கு எந்த விதமான தொல்லையும் இருக்கக் கூடாது என நினைத்தேன்.
நிறைய பேர் என்னிடம் கார் இல்லையே, நிகழ்ச்சிக்கு போக வேண்டுமானால் கூட நண்பர்கள் காரில் தான் போக வேண்டியுள்ளதாகச் சொன்னார்கள். அந்த மாதிரி காரை வாங்கிவிட்டு சாலையோரம் போறதுக்கு, சாலையோரம் இருக்கும் மக்கள் இந்த ஆம்புலன்சில் போனார்கள் என்றால் ஃப்ரண்ட்ஸ் காரில் போவது போல் இல்லை பென்ஸ் காரில் போவது போல் இருக்கும் என்று கூறினேன். ஒடுக்கப்பட்ட மக்கள் என சொல்லப்படுபவர்களைத் தொடுவது அவமானம் என்கிறார்கள். அவங்களுக்கு உதவி செய்வது அவமானம் கிடையாது.
அது மனிதாபிமானம் இந்த மாதிரி ரொம்ப கருத்தாக எனக்கு பேச தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன். எல்லாருமே ஒரு தாய் மக்கள், எல்லாருமே தமிழ்நாட்டு மக்கள். 125 நாளில் 4 ஆம்புலன்ஸ் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சக்திக்கு மீறின ஒரு விஷயம். இதுக்கப்புறமும் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்ததாக 5வது ஆம்புலன்ஸ் பாலமலை கிராமத்திற்கு கொடுக்கவுள்ளேன். மொத்தம் 10 ஆம்புலன்ஸ் கொடுக்கப் போராடுகிறேன். யாருடைய ஃபண்டிலும் நான் பண்ணவில்லை. என்கிட்ட இருக்கிறதை வைத்து இந்த தொண்டு பண்ணுகிறேன் என்று பாலா அப்போது கூறினார்.
இதனிடையே பாலா, அண்மையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனகாபுத்தூர் மக்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். அந்த வகையில், 200 குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் பாலா வழங்கினார். இதுதொடர்பாக அப்போது செய்தியாளர்களிடம் கூறும் போது, 2015 வெள்ளத்தின்போதே உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையாக இருந்தது. ஆனால் அப்போது என்னிடம் காசு இல்லை. இப்போது என்னிடம் ரூ.2.25 லட்சம் இருந்தது. என்னுடைய சொந்த தேவை மற்றும் வீட்டு வாடகை கொடுப்பதற்காக ரூ.25 ஆயிரம் எடுத்துக் கொண்டு 2 லட்சத்தை மக்களுக்கு கொடுத்து விட்டேன் என்றார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும் வாழவைத்திருக்கிறது. நம்மை பார்த்துக் கொள்வது சென்னைதான். அதனால் நம்மால் முடிந்ததைச் செய்து இந்த ஊரை பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. யாரிடமும் நன்கொடை எதுவும் நான் பெறவில்லை. முழுக்க முழுக்க நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம்தான் என்றார்.
இந்நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை நடிகர் பாலா தேடித்தேடி சென்று இன்று வழங்கியுள்ளார். பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கி இருக்கிறார். சின்னத்திரை நடிகரான பாலா தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்து வருவது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாலாவை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
one india!