கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ள மிட்செல் ஸ்டார்க் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் சுமார் ரூ.11 லட்சம் இந்திய மதிப்பில் சம்பளம் பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார். ஆர்சிபி அணியுடன் கடைசி வரை போட்டி போட்டு ஐதராபாத் அணி வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனை பேட் கம்மின்ஸ் படைத்தார்.
இந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக கம்மின்ஸ் தான் இருப்பார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பெயர் ஏலத்தில் உச்சரிக்கப்பட்ட பின், அவரை வாங்க பல்வேறு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. முதலில் மும்பை அணி ஸ்டார்க்கை வாங்க ரூ.9.80 கோடி வரை முயற்சித்தது.
ஆனால் அதன்பின் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் சரிக்கு சமமாக களத்தில் இறங்கின. இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கான ஏலம் ரூ.20 கோடியை கடந்தது. இதனால் அரங்கில் இருந்த அனைவரும் கைகளை தட்டி உற்சாகம் செய்தனர். அதன்பின் ரூ.22 கோடிக்குள் எந்த அணியாவது வாங்குமா என்ற எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசியாக கேகேஆர் அணி ரூ.24.75 கோடிக்கு (இந்திய மதிப்பில்) மிட்செல் ஸ்டார்க்கை வாங்கியுள்ளது. இதன் மூலம் பேட் கம்மின்ஸை படைத்த சாதனையை அடுத்த சில நிமிடங்களிலேயே மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். இதனால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மிட்செல் ஸ்டார்க் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.2.62 கோடியும், ஒவ்வொரு ஓவரிலும் 4 ஓவர்களை மிட்செல் ஸ்டார்க் வீசும் பட்சத்தில் ஒரு பந்துக்கு ரூ.10.96 லட்சம் ஊதியமாக பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.