இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒட்டுமொத்தமாக 333 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள்.
மொத்தம் 77 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். வெளிநாட்டு வீரர்களை அதிகபட்சமாக 30 பேர் வரை ஏலத்தில் எடுக்கலாம். துபாயில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 11.30-க்கும், இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கும் ஏலம் தொடங்கவுள்ளது.
உலகின் பிரமாண்ட கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐபிஎல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே வரையில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளதால், அதற்கு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த ஐபிஎல் தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த ஷாரூக்கான், சித்தார்த், சந்தீப் வாரியர், பாபா அபராஜித், பாபா இந்திரஜித், பிரதோஷ் பால், அஜிதேஷ், ரித்திக் ஈஸ்வரன், குர்ஜப்னீத் சிங், ஜதாவேத் சுப்ரமணியன், பி. சூர்யா ஆகிய 11 வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.