நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக இதனால், தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அகஸ்தியர் அருவில் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து கொண்டு விழுகிறது. நெல்லை மாவட்டத்தின் நகர பகுதிகள், திசையன் விளை உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இடைவிடாமல் பெய்யும் இந்த மழை இன்றும் பெய்யும் என்று வானியல் ஆர்வர்லர்கள் கூறி வருகின்றனர்.
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கூறிய மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்றி அரசு அலுவலங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளான தீ அணைப்பு துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், குடிநீர் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், போக்குவரத்து, உணவகங்கள், பெட்ரோ பங்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல செயல்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.