கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு இரணைமடு குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சத்தியசீலன் செந்தில்குமரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.முல்லைத்தீவில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பண்டாரவன்னியன் கிராமத்தில் வீடுகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, வவுனிக்குளம் வான்பாய்வதால் மாந்தை கிழக்கிற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 216 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டில் உள்ள 30 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு, தென், ஊவா மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, வவுனியா, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களில் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீட்டர் வரையில் அதிகரிக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறுவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *