அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை
உருவரைச்சட்டகம் தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் (கலாநிதி) வி.
இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழு கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கூடிய போது கொள்கை
உருவரைச்சட்டகம் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்ததுடன், இதில்
சமுகமளித்திருந்த உறுப்பினர்கள் பல யோசனைகளை முன்வைத்திருந்தனர். அந்த முன்மொழிவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து இக்கூட்டத்தில்
கலந்துரையாடப்பட்டது.
பிரதமரின் செயலாளரும் தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகத்தை
தயாரிப்பதற்கான அமைச்சரவைக் குழுவின் தலைவருமான அனுர திசாநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க ஆகியோர் உருவரைச்சட்டகத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றிக் கலந்துரையாடினர்.
எதிர்காலத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்யவிருப்பதாகக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குழுவின்
உறுப்பினர்களான ஸ்ரீதரன், முதித பிரிஷாந்தி, மஞ்சுளா திஸாநாயக்க
மற்றும், பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், ராஜிகா
விக்ரமசிங்ஹ, செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தலைவரின் அனுமதியுடனும்
கலந்துகொண்டனர்.