இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க அண்மையில் (08) தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஸ்லே இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற செயலாளர்
நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, மற்றும் அரவிந்த குமார் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ செயலாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், உதவிச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாஸ கொடிதுவக்கு மற்றும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இலங்கை – எகிப்து இராஜதந்திர உறவுகளுக்கு 66 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஸ்லே குறிப்பிடுகையில், புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் காணப்படும் நல்லுறவை விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
தன்னைத் தலைவராக தெரிவு செய்தமை தொடர்பில் நன்றியைத் தெரிவித் கீதா குமாரசிங்க செழுமையான வரலாறு, கலை மற்றும் தொழில்துறை கொண்ட நாடான எகிப்துடன் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக கூறினார்.