மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்துக்கு அமைய 2023.12.04ஆம் திகதிவரை வரித்தவணையைச் செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான மது உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கவும் – வழி வகைகள் பற்றிய குழு அறிவுறுத்தல்.
வசூலிக்கப்பட வேண்டியுள்ள 173 பில்லியன் ரூபா வரியை (collectable taxes) வசூலிக்கவும்
பணிப்புரை.
கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் தேவையற்ற இலாபமீட்டிய தரப்பினரிடமிருந்து உரிய வரியை வசூலிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் – வழி வகைகள் பற்றிய குழு அறிவுறுத்தல்.
மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்திற்கு அமைய 04.12.2023 திகதி வரை வரி நிலுவைத் தவணையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், 2023 ஜூன் 30ஆம் திகதியில் 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு அதிகமான வரிநிலுவை காணப்படும் வரி செலுத்துபவர்களின் பட்டியலை வழங்குமாறு, 2023.07.24 ஆம் திகதி குழுவில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு குழு அமர்வுகளில் அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் கோரிய போதும் அதனை இதுவரை வழங்காமை ஏன் என்பது குறித்தும் வழி வகைகள் பற்றிய குழு கேள்வியெழுப்பியது. அது தொடர்பில் சட்டமா அதிபரின்
நிலைப்பாட்டை கோரியிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததுடன்,டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பட்டியலை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் சில பரிந்துரைகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை, கால அவகாசம் கோரியமை, பரிந்துரைகளை நிறைவேற்றாமை தொடர்பில் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டல சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (06) கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டீப் தவிர ஏனைய நிறுவனங்களின் கோதுமை இறக்குமதி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்ததுடன்,
இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களும் பெருமளவு கோதுமை மா தொகையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும், தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 16 ரூபா வீதம் வரி விதித்ததன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு கணிசமான இலாபம் ஈட்டப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அத்துடன், சீனிக்குக் காணப்பட்ட விசேட பண்ட வரி 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக
உயர்த்தப்பட்டதன் மூலம் சீனி இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 8500 டொன் சீனியை சந்தைக்கு விநியோகத்தமையின் காரணமாக கணிசமான இலாபம் சம்பந்தப்பட் நிறுவனங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் ஈட்டப்பட்ட அதிக இலாபத்துக்கான வரியை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வரி ஏய்ப்புச் செய்த, வரி செலுத்தாத, முறைப்பாடு உள்ள வரி செலுத்துனர்களின் நிலுவை வரியை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டத்தில் காணப்பம் வரி நிலுவை (Collectable taxes) 173 பில்லியன் ரூபாவை மீண்டும் வசூலிப்பதற்கான திட்டத்த தயாரித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட 39 பரிந்துரைகளில், மதுபான உற்பத்திக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஆகக் குறைந்தது 10 மில்லியன் ரூபாவரைஅதிகரிப்பது தொடர்பான குழுவின் பரிந்துரை மற்றும் மாவட்டத்துக்குள் ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு மேலான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை குழுவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் இவற்றை நிறைவேற்றாமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டது. எனினும், மதுவரித் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்புக்கு அமைய ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பதிரத்தைக் கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது காண்பிக்கப்படுவதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறு குழு வலியுறுத்தியது.
மேலும், தற்போது 46 கள் உற்பததி நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றைக் கண்காணித்து நாளாந்தம் உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்க குழுவின் பரிந்துரைக்கு அமைய கையடக்கத்தொலைபேசி செயலியை தயாரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுங்க தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஸ்கானர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், நிதி அமைச்சுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் கீழ் அரச தனியார் கூட்டுத்திட்டமாக இதற்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அனர்த்த முகாமைத்துவம், அஸ்வெசும நலன்புரித் திட்டம் மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நகரப் பகுதிகளில் உள்ள யாசகர்கள் பற்றிய கணக்கெடுப்பு பற்றிய விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் குழுக் கூடு்டத்தில் நிதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், நலன்புரி நன்மைகள் சபை போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக அபேசிங்ஹ, கௌரவ இஷாக் ரஹ்மான் மற்றும் கௌரவ சுதத் மஞ்சுளஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.