“ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” பாடல் புகழ் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் எழுதிய புதிய பாடல் “போய் வாறோம் தாயே” உலகத்தமிழர் உள்ளங்களை உலுக்க ஆரம்பித்துள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த இயக்குனர் சிபோ சிவகுமாரன் இயக்கியுள்ள “நாளைய மாற்றம்” திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
பாடலுக்கு பிரபாளினி பிரபாகரன் இசையமைக்க தென்னிந்திய பின்னணிப்பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். இப்பாடல் கேட்போரை கண்கலங்க வைக்கிறது. பாடலைக்கேட்டு கவலை தாங்கமுடியாமல் பலரும் அழுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை எழுதிவருகின்றனர்.
பாடல் பற்றிய அனுபவத்தை தென்னிந்திய பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எம்மிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
“தாயைப்பிரிவதும் தாய் மண்ணைப்பிரிவதும் ஒன்று.
தாயை, தாய்நாட்டை பிரியும்போது ஏற்படும் மரணவலியை நான் பாடலாக்கியுள்ளேன்.
கடைசிப்போரின் கந்தகப்பொழுதுகளை..
முள்ளிவாய்க்காலின் சொல்லில்லடங்கா நிமிசங்களை..
நாலைந்து வரிகளுக்குள் நறுக்கிவைத்துள்ளேன்…
ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியை பாடலின் ஊடாக பதிவு செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறியிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்களே பாடலைக்கேட்டு கண்கலங்க ஆரம்பித்துள்ளனர்.பாடலை எனது முகநூலிலும் YouTube தளத்திலும் பார்வையிடலாம்.
அமெரிக்காவில் வாழும் இசையமைப்பாளர் பிரபாளினி பிரபாகரன் இசையில், இயக்குனர் சிபோ சிவகுமாரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படத்துக்காகத்தான் இப்பாடலினை நான் எழுதியுள்ளேன்.
மரணவலிதரும் இப் பாடலினை பிரபல பின்னணிப்பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார்.
தமிழ்,கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 2000 அதிகமான பாடல்களை பாடியிருக்கும் திரைப்படப் பாடகர் ஸ்ரீநிவாஸ் . இளையராஜா, தேவா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர் போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியவர். தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதினை பெற்றவர்அவர் என்பாடலைப்பாடுவது நான் பெற்ற பேறு. பாடலை உருக்கமாக அவர் பாடும்போதே கண்கள் கலங்கி நின்றதை கண்ணுற்றேன்.பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது. இப்பாடல் என் பாடல் பணியில் முக்கிய பாடலாக இருப்பது உறுதி என குறிப்பிட்டார்..