கலையைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் ஊடாக புதிய அதிகாரசபை – கலை சங்கங்களின் பிரதிநிதிகள் நிதி அமைச்சருடன் கலந்துரையாடல்..!!
கலை மற்றும் கலைஞர்களின் நிபுணத்துவத்தை பாதுகாக்கும் சட்டத்தின் மூலம் அதிகாரம் கொண்ட புதிய அரச நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கலை சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சினிமா, தொலைக்காட்சி நாடகம், இசை , வீதி நாடகம், சித்திரம், கவிதை, எழுச்சிக் கவிதை உள்ளிட்ட சகல கலைத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் அதிகாரம் கொண்ட புதிய சட்டத்தின் ஊடாக இந்த அரச நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இங்கு பரிந்துரைக்கப்பட்டது.
கலைஞரின் தொழில் திறனைப் பாதுகாத்து இதனைத் தொழில்துறையாகப் பேணுவது குறித்து புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான அரச தலையீடு இதுவரை இடம்பெறாதது பெரும் பிரச்சினை எனவும், அதனால் கலைஞர்கள் தாங்களாகவே ஒன்று திரண்டு பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கலைஞர்கள் சுட்டிக்காட்டினர். இதனை முக்கிய தேவையாகக் கருதி இவ்விடயத்தில் நீதி அமைச்சர் தலையிட்டிருப்பதற்கு கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிடுகையில், கலைத்துறை தொடர்பான அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்குவதாகச் சுட்டிக்காட்டினார். அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை தயாரித்து ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் கலைச் சங்கங்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், அரசியல் கட்சி பேதமின்றி பேதமின்றி கலை மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
நீதி அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ஹர்ஷ அபேகோன் இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.