இலங்கை எகிப்து இராஜதந்திர நினைவு முத்திரை வெளியிடப்பட்டது ..!!

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட 66 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குணவர்தன அவர்களால், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே உள்ளிட்ட பிரமுகர்களுக்கு நினைவு முத்திரை கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இலங்கையில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதலாவது அரபு நாடாக 1957ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முக்கிய வருடமாக அமைந்தது என்றார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

மகத்தான வரலாற்றைக் கொண்ட இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் மகத்தான நட்புறவை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மஜீட் மொஸ்லே தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான 66 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் முகமாக எகிப்து அரசாங்கமும் நினைவு முத்திரையொன்றை வெளியிடவிருப்பதாகத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், சபை முதல்வர் அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, தபால் மா அதிபர் எம்.ஆர்.பி. சத்குமார, பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க மற்றும் தபால் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *