மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. Kamal Haasan அவர்கள் இன்று, கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டினார். இதுபோன்ற பேரிடர்களுக்கு எதிர்காலத்தில் நாம் தயாராக வேண்டும் என்றும், பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார்.
நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு பால் மா, அரிசி, கோதுமை, ரவை, தேயிலை ,சீனி , உப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது என்று தெரிவித்த கமல்ஹாசன் , “ஒரு centralised kitchen அமைத்து தினமும் 5000 பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யும் பணியை இன்று முதல் தொடங்குகிறோம். நிலைமை சீரடையும் வரை இப்பணி தொடரும்” எனவும் கூறினார்.
மழைக்கால நோய்த்தொற்றுக்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான வழிமுறைகளை இதற்குரிய நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசி புதிய வழிவகைகளைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.