வலது கண்ணின் பார்வையை இழந்து வந்ததாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் தனது youtube சேனலில் பேசிய டிவில்லியர்ஸ், தன்னுடைய மகன் விளையாடும்போது அவருடைய ஷூவால் தன் வலது கண்ணை அடித்து விட்டதாகவும், அதிலிருந்து தமது பார்வை குறைய ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். எனினும் முதலில் அதற்கான அறுவை சிகிச்சையை தான் மேற்கொள்ளவில்லை என்றும் அதன் பிறகு மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக டிவில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது மருத்துவர்கள் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட் விளையாட முடிகிறது என்று கேட்டதாகவும் எனது இடது கண் நன்றாக செயல்பட்டதால் கடைசி இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டில் நன்றாகவே விளையாட முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனா காலமும் தமது கிரிக்கெட்டில் பெருமளவில் பாதித்ததாகவும் அவர் கூறினார்.
கிரிக்கெட் உலகில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தான் தமது வாழ்க்கையில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள டிவிலியர்ஸ் தம் அணிக்கு திரும்பிய போது அணியின் சூழல் பழைய மாதிரி இல்லை என்பதை உணர்ந்ததாக கூறினார்.சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு மீண்டும் ஒரு முறை சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாட வேண்டும் என்று தாம் நினைத்ததாக குறிப்பிட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவும் அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி அதன் பிறகு ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்ததாக கூறினார். அனைவரின் கவனமும் என் மீது விழ நான் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட டிவில்லியர்ஸ் நன்றி மட்டுமே தெரிவித்துக் கொண்டு விலக நினைத்ததாகவும் கூறியுள்ளார்.