மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும், மழை முற்றிலுமாக ஓய்ந்த நிலையிலும், வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் மட்டும் இன்னும் அகலவில்லை. சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடிந்தாலும் இன்னமும் நிறைய இடங்களில் தண்ணீர் அகலவில்லை. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், மற்றும் புற்நகர் பகுதிகளான மேற்கு தாம்பரம் மற்றும் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
குடி தண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதேபோல் இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கார்களும், பைக்குகளும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.
இப்படி வெள்ளத்தால் மக்களும் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன என்றும் எனவே மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.