வெள்ளவத்தை பீட்டர்சன் வீதி குரே பார்க் அருகில் வீதி திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வீதியின் இரு புறமும் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது. டுப்ளிகேஷன் வீதி வழியாக வெள்ளவத்தை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் தர்மாராம சந்தியில் இடப்பக்க வீதி மூடப்பட்டுள்ளதால் வலது புறம் திரும்பி காலி வீதி ஊடாகவே பயணிக்க வேண்டும்.
இதனால் பாடசாலை விடும் நேரங்களிலும், மாலையில் அலுவலகம் முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரங்களிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், வீணான கால விரயத்தையும் எதிர்கொள்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த திருத்த பணிகள் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளமையால், வாகனங்களில் பயணிப்போர் மாத்திரமன்றி அப்பகுதியில் குடியிருக்கும் பிரதேச வாசிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உரிய தரப்பினரிடம் இதுபற்றி முறையிட்டும் அவர்கள் அசமந்த போக்குடனேயே நடந்துகொள்வதாகவும், திருத்தப் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குடியிருப்பாளர் ஒருவர் வைப்ஸ் செய்தி சேவைக்கு தொடர்பு கொண்டு தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்..