மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
புயல் தாக்கம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்யம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.