ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் தெற்கு பகுதிகள் பனிப்பொழிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் நகரத்தில் ரயில், பேருந்து போக்குவரத்து மட்டும் இன்றி விமான சேவையும் முடங்கியது. கடந்த 1933 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் கடுமையான அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சாலைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கின்றன. இதனால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கூட பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டு நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
முனிச் நகரத்தில் விமான சேவையும் பாதிக்பட்டுள்ளது. அதிகப்படியான பனிப்பொழிவால் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், 760 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஏற்பட்ட இந்த பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பேயர்ன் முனிச் மற்றும் யூனியன் பெர்லின் இடையேயான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனிப்பொழிவினால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிலர் காயம் அடைந்து இருப்பதாகவும் ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியின் பல பகுதிகளில் மேலும் சில நாட்களுக்கு அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என்றும் வெப்ப நிலையும் கணிசமாக குறையும் எனவும் அங்குள்ள வானிலை அமைப்பு கூறியுள்ளது.