மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த பெருமழையால் சென்னை விமான நிலையத்தில் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது. இதனால் சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணி முதல் வழக்கம் போல இயங்கி வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 45 மணிநேரத்தில் 43 செ.மீ மழை கொட்டியது. சென்னை மற்றும் புறநகர்களில் வரலாறு காணாத மழையால் ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏரிகளின் உபரிநீர், மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னை விமான நிலையத்தில் 2 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது.
சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்கள், புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 150க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் நகர்ந்து ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டது. ஆந்திராவில் இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளது. சென்னையிலும் மழை ஓய்ந்து வெயில் அடிக்க தொடங்கி விட்டது. சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணிக்குப் பின்னர் இயங்க தொடங்கியது.
சென்னைக்கு வர வேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்களுமாக மொத்தம் 177 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுகின்றன எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.