இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதன் மூலம் டிராவிடின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை இவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உலகக் கோப்பையுடன் டிராவிடின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அவரது பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து பிசிசிஐ கடந்த வாரம் அவரை அணுகியுள்ளது.
கடந்த இரு வருடங்களாக ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்தார். நடந்து முடிந்த உலகக் கோப்பையுடன் டிராவிடின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. இவரது பதவிக் காலத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது.
பிசிசிஐ அளித்துள்ள இந்தப் பதவிக் கால நீட்டிப்பை டிராவிட் ஏற்றுக்கொண்டால், இவரது முதல் பணி தென்னாப்பிரிக்க பயணமாக இருக்கும். தென்னாப்பிரிக்க பயணம் தலா 3 டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் அடங்கிய தொடர்களுடன் டிசம்பர் 10-ம் தேதி தொடர்கிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியனில் முதல் டெஸ்டும், ஜனவரி 3-ம் தேதி கேப்டவுனில் இரண்டாவது டெஸ்டும் நடைபெறுகிறது. இந்தப் பயணத்துக்குப் பிறகு இந்தியாவில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.
2021-ல் டிராவிடுடன் கைகோர்த்த உதவிப் பயிற்சியாளர்களின் பதவிக் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலிப் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக உள்ளார்கள்.