மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்தார்.
2006 இல் பொலிஸ் பரிசோதகராகவும், 2011 இல் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராகவும், 2015 இல் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் நவம்பர் 2019 இல், தேசபந்து தென்னகோன் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டு, ஜனவரி 01, 2020 அன்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.
அவர் டிசம்பர் 05, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றுகிறார்.
1971 இல் பிறந்த தேசபந்து தென்னகோன் கொழும்பு நாலந்தா கல்லூரியில் தனது பாடசாலை கல்வியைப் பெற்றார்.
அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார், அங்கு அவர் முறையே இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.
தேசபந்து தென்னகோன் இலங்கை பொலிஸில் தனது 25 வருட சேவையின் போது, நாட்டின் பல பகுதிகளில் சேவையாற்றியுள்ளார். அவர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஒடுக்குவதற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கியுள்ளார்.
மேலும் தொற்றுநோய் சூழ்நிலையின் போது கொவிட் – 19 பரவுவதைத் தடுக்க மேல் மாகாணத்தில் பல திட்டங்களை செயல்படுத்தினார்.
4 சேவை நீடிப்புகளுக்குப் பின்னர், நவம்பர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மார்ச் 26 ஆம் திகதி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விக்ரமரத்னவின் பதவிக்காலத்தை ஜூன் 26 வரை 3 மாதங்களுக்கு நீடித்திருந்தார்.
பின்னர், ஜூலை 09 அன்று, அவருக்கு 3 மாதங்களுக்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அக்டோபர் 13 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் 3 வார கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலத்தை நிர்ணயிக்கும் பிரேரணை அமைச்சரவையின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் அதிகபட்சமாக 3 வருடங்கள் வரை வரையறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.