புத்தளம் – நாகமடுவ பிரதேசத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நான்கு பேர் கைது (26) ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டுள்ளனர்.
வன்னாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வர்த்தகர், சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் உட்பட, நால்வரும் புத்தளம் நகரைச் சேர்ந்தவர்கள் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயணித்த கெப் வண்டியில் இருந்து அனுமதிப்பத்திரம் பெற்ற போர 12 துப்பாக்கி ஒன்றும் 04 வெற்றுத்தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட வர்த்தகருக்கு நாகமடுவ பிரதேசத்தில் காணி உள்ளதாகவும், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் தோட்டத்துக்கு வரும் இவர், விலங்குகளை வேட்டையாடுவதாகவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் புத்தளம் சிவில் பாதுகாப்புக் குழு தலைவர் உட்பட வேட்டையில் இணைந்த ஏனைய சந்தேகநபர்கள் தலா ஐந்து இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.