ஹட்டன் கல்வி வலய கோட்டம் மூன்றில் இயங்கும் மஸ்கெலிய மாமா/ஹவ் மொக்கா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவுக்கு செல்லும் பாதை, கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய மண் மேடு சரிந்து, குறித்த பாதை சுமார் இருபது அடி வரை மண் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்ப்பட்டுள்ளது.
இதன் வழியாகவே ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது வேறு பாதையில்லாத காரணத்தால் , குறித்த பாதையில் மாணவர்கள் பாடசாலை செல்லும்போது அவர்களின் உடைகள் சகதி படிந்து விடுவதாகவும் சில மாணவர்கள் குறித்த பாதையில் செல்ல முடியாத நிலையில் தடுமாறி விழுந்து பாடசாலை செல்ல முடியாமல் வீடு திரும்பியுள்ளதாகவும், அவ்வழியே தமது அன்றாட பணிக்காக.செல்லும் பிரதேச மக்களும் மாற்று பாதையின்றி பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் சம்பந்தமாக பாடசாலை நிர்வாகத்திற்கு பலமுறை அறிவித்த போதும் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை எனவும், இதனை முறையாக பாதுகாப்பு சுவர் அமைக்காத பட்சத்தில் நாளடைவில் பாடசாலை கட்டிடத்திற்கும் பாரிய சேதம் ஏற்படலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாடசாலையில் ஆரம்ப பிரிவு முதல் உயர்தர பிரிவுகள் வரை சுமார் 450 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுககின்றனர்.
நன்றி:மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்