ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிரபலமான தொழிலதிபர் திலீப் பாப்லி. இவர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நகைகள் மற்றும் வைர நகை கடைகளை நடத்தி வரும் பாப்லி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது மகள் விதி பாப்லி திருமணத்தை தனித்துவமாக மற்றும் வித்தியாசமாக நடத்த முடிவு செய்தார்.
இதனையடுத்து விதி பாப்லி-ஹ்ரிதேஷ் சைனானி ஜோடியின் திருமணம் அசாரணை முறையில் சிறப்பாக நடந்தது. கடந்த 24ம் தேதியன்று போயிங் 747 விமானத்தில் துபாயில் இருந்து ஓமனுக்கு செல்லும் 3 மணி நேர விமான பயணத்தின்போது விமானத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக பாரம்பரிய முறைப்படி திருமண ஊர்வலம் நடைபெற்றது. திருமண ஜோடியுடன், நேர்த்தியான மற்றும் ஸ்டைலான குர்தாக்களில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் உள்பட சுமார் 350 விருந்தினர்களுடன் திருமண ஊர்வலம் துபாய் தெற்கில் உள்ள ஜெடெக்ஸ் தனியார் முனையத்தை வந்தடைந்தது. பின்னர் திருமணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போயிங் 747 விமானத்தில் கல்யாண ஜோடியுடன் விருந்தினர்கள் விமானத்தில் ஏறினர்.
இந்த விமானம் திருமண விழாவுக்காக மாற்றியமைக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறிய ப்ரொஜெக்டர் பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் அனைவரும் திருமண நிகழ்வை பார்க்கலாம். விமானம் துபாயில் இருந்து ஓமனை நோக்கி வானில் பறக்கையில், பாப்லி-ஹ்ரிதேஷ் சைனானி திருமணம் கோலகமாக நடைபெற்றது. விமானத்தில் பிரபலமான இந்தி பாடலுக்கு விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடினர். திருமணம் முடிந்த பிறகு விமானத்தில் விருந்தினர்களுக்கு, விமானத்தின் உயர் ரக விருந்து வழங்கப்பட்டது. அதில், காய்கறி ஜால்ஃப்ராஸி, காளான் புலாவ், பாலக் பனீர் மற்றும் தால் மசாலா போன்ற உணவுகள், தரமான ரொட்டி மற்றும் வெண்ணெய் ஆகியவை அடங்கும்.
மணமகள் விதி பாப்லியின் பெற்றோரும் 28 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற விமானத்தில் திருமணம் செய்தவர்கள். அவர்கள் ஏர் இந்தியா விமானத்தை திருமண இடமாக மாற்றினர். அப்போது இது பரபலாக பேசப்பட்டது. தற்போது மகளின் திருமணத்தையும் விமானத்தில் நடத்தி மீண்டும் அனைவரையும் வியக்க வைத்து விட்டார்.