ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து, அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு திரும்பப் பெற குஜராத் அணியிடம் பேரம் பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர் சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் ஆகும். 2022 ஐபிஎல் தொடரில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகம் ஆனது. அப்போது ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து, முதல் தொடரிலேயே கோப்பை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
2023 ஐபிஎல் தொடரிலும் இறுதிப் போட்டி வரை வந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த வகையில் இரண்டு தொடர்களில் பங்கேற்று இரண்டிலும் தன் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்து அதில் ஒரு முறை கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்று இருந்தார் ஹர்திக் பாண்டியா.
இப்படி ஒரு சிறந்த கேப்டனாக இருந்த போதும், மும்பை இந்தியன்ஸ்-க்கு அவரை இடம் மாற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல வெளிவராத உண்மைகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
2023 ஐபிஎல் தொடரின் போது குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளருக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் மனக் கசப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதனை அடுத்து அவர் அந்த அணியை விட்டு விலகும் முடிவை அப்போதே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போதே அவர் தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான அம்பானி குடும்பத்தினரிடம் இது பற்றி பேசியதாகவும், அதை அடுத்தே அவரை அணி மாற்றம் செய்ய வேண்டிய வேலைகளை அப்போதே மும்பை அணி தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியாவை அழைத்துக் கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.