வீட்டு விநியோக முறையில் ‘டோ டு டோ’ முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் சரக்கு போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு, “டோ டு டோ” விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதற்கு முன்னர் அனுப்பப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண சரக்கு முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும்.
இது தொடர்பில் முறையான சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு அடுத்த வருடம் மீண்டும் குறித்த முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தீர்மானத்தினால், இத்துறையில் பணியாற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட பல தரப்பினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என ஐக்கிய பயண சரக்கு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் பண்டுக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.