ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜாஷ் இங்லீஷ் 47 பந்துகளில் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் களத்தில் இறங்கினர்.
மேத்யூ ஷார்ட் 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த ஜாஷ் இங்லீஷ் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த மேட்ச்சில் 47 பந்துகளில் ஜாஷ் இங்லீஷ் சதம் அடித்து அசத்தினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 110 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 52 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த டிம் டேவிட் 19 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் குவித்தது.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்திலேயே ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ரன் ஏதும் எடுக்காமல் அவர் வெளியேறியதை தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சூர்யகுமார் – இஷான் கிஷன் இணை பொறுப்புடன் விளையாடி 112 ரன்கள் 3ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேற சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 42 பந்துகளில் 4 சிக்சர் 9 பவுண்டரியுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே ரின்கு சிங் பவுண்டரி அடிக்க அடுத்த பந்தில் பைஸில் 1 ரன் கிடைத்தது. 3 ஆவது பந்தை எதிர்கொண்ட அக்சர் படேல் சீன் அபாட் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 3 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
4 ஆவது பந்தில் ரவி பிஷ்னோய் ரன் அவுட்டாகி வெளியேற ஆட்டம் உச்ச கட்ட பரபரப்புக்கு சென்றது. 2 பந்துக்கு 2 ரன்கள் என்ற நிலையில், 5 ஆவதுபந்தில் 2 ஆவது ரன் எடுக்க முற்பட்டபோது அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என ஆட்டம் மாறியது. இதனை அபாட் நோபாலாக வீசியதை தொடர்ந்து இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.