பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய 5 தசாப்தங்களாக இலங்கைத் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி “ரவி – சினிமா அரை நூற்றாண்டு சுயநினைவு” பாராட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது.
1974 இல் திரையிடப்பட்ட ‘தரங்கா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இணைந்த ரவீந்திர ரந்தெனிய என்ற நடிகர், சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் என்பதோடு தனக்குக் கிடைத்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து கடந்த 5 தசாப்தங்களாக இலங்கை சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் பல மறக்க முடியாத நினைவுகளை பதிக்கச் செய்தவர்.
துஹுலு மலக், பொடி மல்லி, வீரபுரன் ,ஜனேலய, மாயா, ஆராதனா, தடயம, திருமணப் பரிசு, சாகர ஜலய, சைலம, சிறிமெதுர, ஆனந்தா ராத்ரிய,கலுதியதகர, உள்ளிட்ட 100இற்கும் மேற்பட்ட சிங்களத் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சிங்களத் திரையுலகத்தை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல பாரிய பங்களிப்புச் செய்துள்ளார்.
சரசவி, ஜனாதிபதி, சுவர்ண சங்க, ஓ.சி.ஐ.சி உள்ளிட்ட பல விருது விழாக்களில் 15 தடவைக்கு மேல் இவர் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 07 தடவைகள் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளைப் பெற்றுள்ள அவர் சிறந்த துணை நடிகர் மற்றும் பாராட்டு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். சினிமாவுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக நுண்கலை பல்கலைக்கழகத்தின் ‘தர்ஷன சூரி’ விருதையும் பெற்றுள்ளார். இது தவிர, பல சர்வதேச திரைப்படங்களுக்கு பங்களித்த இந்த தலைசிறந்த நடிகர், Street Child (முக்கிய வேடம்) Mother Thresa, Jungle Heat, Sandokan மற்றும் திரையிடப்பட இருக்கும் Distant Tear Drop (முக்கிய வேடம்) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட விமர்சகர் காமினி வேரகொட சிங்களத்திலும் உதித தேவப்பிரிய ஆங்கிலத்தில் எழுதிய ரவீந்திர ரந்தெனியவின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரண்டு நூல்களும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், முதற்பிரதியை ஜனாதிபதியிடம் ரவீந்திர ரன்தெனிய வழங்கி வைத்தார்.
ரவீந்திர ரந்தெனியவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவர் பல துறைகளுக்கும் பங்களிக்கக்கூடிய தலைசிறந்த நடிகர் என்று தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக அவர் தம்முடன் நெருக்கமாகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தனது அரசியல் நடவடிக்கைகளில் தமக்குக் கிடைத்த ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
ரவீந்ரவை நான் முதன்முதலில் 1975 இல் வெளிவந்த கலுதிய தஹர திரைப்படத்தின் போது தான் கண்டேன். அதே வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நான் களனிக்கு வந்தேன். அங்கு தலுகமவில் இருந்து வந்திருந்த ரவீந்திரவின் குடும்பத்தை அறிந்து கொண்டேன். எங்கள் கட்சிக்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர். அதன்படி அவருடன் அரசியலில் ஈடுபட்டேன்.
மேலும், திறந்த பொருளாதாரத்தால், இந்த நாட்டில் திரைப்படத்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. ரவீந்திர ரந்தெனிய அந்த நிலைமையுடன் மேல்நோக்கி வருவதைக் கண்டோம். அந்த காலகட்டத்தில் பல முக்கிய திரைப்படங்களில் நடித்தார். அதே சமயம் அரசியலிலும் இணைந்தார். எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த அவர் இறுதியாக எனது வேண்டுகோளின் பேரில் 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவரது விருப்பம் அரசியலில் அன்றி கலைத் துறையில் இருந்தது. அவர் ஒரு திறமையான நடிகர். அவர் நீண்ட ஆயுளை பிரார்த்திக்கிறோம். மேலும் பல துறைகளிலும் பங்களிக்கும் திறன் அவருக்கு உள்ளதையும் குறிப்பிட வேண்டும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, திரையுலகத்துடன் தொடர்பான அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது சமகாலத்தவர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.