38- ஆண்டு பழமையான சென்னையின் புகழ்பெற்ற மற்றும் பழமையான 5 ஸ்டார் ஹோட்டல் கிரவுன் பிளாசா வரும் டிசம்பர் 20-ம் தேதியுடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சாமியர்ஸ் சாலையில் அமைந்துள்ள கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் 5 ஸ்டார் ஹோட்டல் வரும் டிசம்பர் 20-ம் தேதியுடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடையாளமாக இருந்த 287 அறைகள் கொண்ட ஹோட்டல் இனி சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஷ்யம் குழுவின் உபெர்-ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட உள்ளது. முதலில் தொழிலதிபர் டி.டி வாசுவால் அடையார் கேட் ஹோட்டல் என விளம்பரப்படுத்தப்பட்டது, பின்னர் ஆடை ஏற்றுமதியாளர் கோயல் ஹோட்டலை வாங்கினார்.
ஐ.டி.சி நிர்வாகம் கிராண்ட் சோலா ஹோட்டல் கட்டிய பிறகு இது கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் என மறுபெயரிடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன் Ceebros என்ற முன்னணி அடுக்குமாடி கட்டட நிறுவனம் இந்த ஹோட்டலை வாங்க இருந்தது. ஆனால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது.
பின்னர் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குழு ஒப்பந்தத்தை இறுதி செய்தது. ஒரு கிரவுண்ட் விலை 10 கோடி முதல் 12 கோடி வரை (ஒரு கிரவுண்ட் = 2,400 சதுர அடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. பாஷ்யம் குழு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்ட உள்ளது. ஒரு சதுர அடி ரூ.30,000 எனக் கூறப்படுகிறது.
பாஷ்யம் குழுமம் சுமார் 130 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உள்ளது. ஒவ்வொன்றும் 5,000 முதல் 7,000 சதுர அடி அளவில் இரட்டைக் கோபுர கட்டடங்களாக அமைக்க திட்டமிட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர அடிக்கு சுமார் 30,000 அல்லது குடியிருப்பு ரூ.15 கோடி முதல் 21 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பாஷ்யம் பிரீமியம் எஃப்.எஸ்.ஐக்கு (தற்போது அனுமதிக்கப்பட்ட 2.5 எஃப்எஸ்ஐக்கு பதிலாக ஏழு எஃப்எஸ்ஐ) மாநில அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேலும் விலையை சதுர அடிக்கு ரூ.50,000 வரை உயர்த்தும் திட்டத்தையும் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், கிரவுன் பிளாசாவில் 1 இரவு தங்க ரூ.10,000 முதல் 12,000 வரை கட்டணம் வசூல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 38- ஆண்டு பழமையான ஹோட்டல் கிரவுன் பிளாசா நிர்வாகம் கூறுகையில், “டிசம்பர் 20, 2023 முதல் விருந்தினர்கள் வருகைக்கு எங்கள் கதவுகள் மூடப்படும் என்று கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளது.