ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 58 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் மத்வேர் 25 ரன்களும், மருமனி 32 ரன்களும் சேர்க்க கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்களான கேப்டன் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தது.
இவர்களை பிரிக்க ஜிம்பாப்வே அணி பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
4 ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.