இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். மலையாளத்தில் அவர் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
கவுதம் மேனன் இயக்கத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை (ஜூலை 10, 2024) நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் மம்முட்டி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதுடன், அவரது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனியே இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
மம்முட்டியின் கடந்த சில திரைப்படங்களான கன்னூர் ஸ்குவாட், ப்ரம்மயுகம், டர்போ போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த புதிய திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த திரைப்படம் மலையாளத்தில் கவுதம் மேனனின் முதல் திரைப்படம் மட்டுமின்றி, மம்முட்டியும் கவுதம் மேனனும் இணையும் முதல் திரைப்படமும் இதுதான்.
இந்த திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவும் மம்முட்டியும் இதற்கு முன்னர், கடைசியாக 2016-ல் புதிய நியமம் எனும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
அதற்கு முன்னர் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், சுமார் 8 வருட இடைவெளிக்குப்பின் இருவரும் தற்போது இணையவுள்ளதாக தெரிகிறது. இப்படத்துக்கு தர்பூகா சிவா இசையமைக்கிறார். இவர் தமிழில் கிடாரி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் மேனனின் கடந்த சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக அவர் ‘நடிகர்’ கவுதம் மேனன் என்ற முறையில் நல்லபெயரை பெற்று வந்தார். அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார் கவுதம்.
இந்நிலையில், தற்போது இயக்குநராக மம்முட்டியுடன் அவர் இணைந்திருப்பதென்பது, இயக்குநர் GVP-க்கு சிறந்த கம்பேக்காக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல கடந்த காலத்தில் மம்முட்டி கம்பெனி தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே மம்முட்டி கம்பெனியின் படமென்ற எதிர்பார்ப்பும் இப்படத்தின்மீது விழுந்துள்ளது.