அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணியில் ‘குட் நைட்’, ‘லவ்வர்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ல், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படம், தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார்.
ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களை தயாரித்த நிறுவனம்தான் இந்த ‘மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்’. ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி.ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரின் படத்தில் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதால், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.