நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருகிய குற்றச்சாட்டில் அவரது தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்,
குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இவர்கள், உலப்பனை பகுதியைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டுக்கு தாய் சென்றபோது, தன்னுடைய 9 வயதான மகனையும், 4 வயதான மகளையும், சாமிமலை,ஓல்டன் தோட்டத்திலுள்ள தனது தாயின் வீட்டில் ஒப்படைத்து சென்றுள்ளார்.பிள்ளைகளை பார்ப்பதற்காக தாயின் வீட்டுக்கு அடிக்கடி வரும் மகன் (தாய் மாமன்) அந்த சிறுமிக்கு மதுவை பருகியுள்ளார். இதனை சிறுமியின் 9 வயதான அண்ணா கண்டுள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே அந்த நபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
(மஸ்கெலிய நிருபர்)