ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி-20 இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக கில்லும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களம் இறங்கினர்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 66 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் வெஸ்லி 1 ரன்னும், தடிவனாஷே மருமனி 12 ரன்னும், பிரையன் பென்னட் 4 ரன்களும் கேப்டன் சிக்கந்தர் ராசா 15 ரன்களும் எடுத்தனர். ஜோனதன் கேம்பல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 7 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதன்பின்னர் க்ளைவ் மடாண்டேவுடன் இணைந்து டியோன் மையர்ஸ் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மடாண்டே 37 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெலிங்டன் மசாகட்சா 18 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே அணி 159 ரன்கள் எடுத்த்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டியோன் மையர்ஸ் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலம் ஜிம்பாப்வே அணி மிக மோசமான தோல்வியை தவிர்த்து பாராட்டை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.