உலகக்கோப்பை டி20 தொடரை வென்ற இந்திய அணி நாடு திரும்பியுள்ள நிலையில், மும்பையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மும்பையின் நரிமன் பாயின்ட் முதல் வான்கிடே மைதானம் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வீரர்கள் அவரிடம் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர்.
11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா கைப்பற்றக்கூடிய ஐசிசி கோப்பை இதுவாகும். இதேபோன்று 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தியா டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பினர்.
டெல்லி விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கோப்பையுடன் ரோகித் சர்மா வெளியே வந்து, அந்த கோப்பையை ரசிகர்களுக்கு காட்டி மகிழ்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
மும்பையில் பொதுமக்கள், ரசிகர்கள் முன்பாக இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது. மும்பை அரபிக்கடலுக்கு இணையாக மக்கள் கூட்டம் நரிமன் பாயின்ட் முதல் வான்கிடே மைதானம் வரை குவிந்து, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகக்கோப்பையுடன் பேரணியாக சென்ற இந்திய அணி வீரர்கள் வான்கிடே மைதானத்தில் பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார்கள் . இதனால் மும்பை நகரமே திருவிழாக்கோலம் அடைந்தது.