பாணந்துறை முதல் கிரிந்த வரையுள்ள 18 கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக அரசாங்கத்திடமிருந்து 1000 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
கடந்த 29ம் திகதி தென் மாகாணத்திலுள்ள கடற்றொழில் துறைமுகங்களுக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன் அத் துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் பொருட்டு உரிய அமைச்சரவைப் பத்திரத்தைதயாரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் நிசாந்த விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.
குறித்த துறைமுகங்களின் குறைபாடுகள் தொடர்பாக துறைமுக அபிவிருத்திக் குழுவும் அப்பகுதி கடற்றொழில் சமூகங்களும் பல்வேறு தடவை அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
இத் துறைமுகங்களில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக் கொண்டு வந்திருந்த நிலையில் அவரது ஆலோசனையின் பேரில் குறித்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.