உலகக்கோப்பை T20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
உலகக்கோப்பை T20 தொடரின் இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும் வெளியேற இந்திய அணி, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.
இதன்பின்னர் இணைந்த அக்சர் படேல் – விராட் கோலி இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ரன்களை குவித்துக் கொண்டிருந்த அக்சர் படேல், 31 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலி – ஷிவம் துபே இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. துபே 27 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது.
உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் டி20 போட்டிகளில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வேகத்தில் போல்டாகி வெளியேறினார். கேப்டன் மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த குவின்டன் டி காக் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் எடுத்தனர். ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்காவுக்கு நம்பிக்கை அளித்த குவின்டன் டி காக் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டி காக் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹெய்ன்ரிக் கிளாசன், 5 சிக்சர்கள் உடன் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
17 ஆவது ஓவரின் முதல் பந்தில் கிளாசனின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்ற, ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அடுத்த ஓவரில் யான்சென் பும்ரா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் டேவிட் மில்லர் தொடர்ந்து களத்தில் நின்று இந்திய அணியின் ரசிகர்களுக்கு பதற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்.
19 ஓவரில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனை ஹர்திக் பாண்ட்யா வீச முதல் பந்தில் டேவிட் மில்லர் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
2 ஆவது பந்து பவுண்டரிக்கு செல்ல, 3 ஆவது மற்றும் 4 ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 5 ஆவது பந்தில் ரபாடா 4 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் 1 ரன் எடுக்கப்பட, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.