T20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒன்பதாவது T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்று கிளைமேக்ஸ். 20 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் திருவிழாவின் இறுதி யுத்தத்தில், முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென்னாப்ரிக்கவுடன் மோதவுள்ளது . லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானம் பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் சாதகமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பேட்டிங்கில் வலுவாகவே உள்ளது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர்கள் செட் ஆகாமல் இருப்பது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி, இறுதி போட்டியில் தன் மீதான விமர்சனத்தை தகர்த்தெறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதே சமயம், கேப்டன் ரோகித் ஷர்மா இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். இக்கட்டான சூழலில், 360 டிகிரி கோணத்தில் விளையாடும் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் கைகொடுப்பது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவும் ஆல்ரவுண்டராக இக்கட்டான நேரங்களில் அணியை மீட்டு வருகிறார்.
எதிரணியான தென் ஆப்ரிக்காவிலும், டி காக், எய்டன் மார்க்ரம், ரீசா ஹென்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் என அதிரடி ஆட்டக்காரர்கள் வரிசையாக உள்ளனர். பந்து வீச்சை பொறுத்தவரையில், பும்ராவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என உலகின் முன்னணி பவுலராக மிரட்டி வருகிறார். அவருடன் அர்ஷ்தீப் சிங்கும் தோள் கொடுத்து வருகிறார்
இந்திய அணியில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் ஆகிய மும்மூர்த்திகள் சுழலில் எதிரணியை சுருட்டி வருகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் ரபடா, நார்க்யா, யான்சென் ஆகியோரின் வேகக்கூட்டணி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. சுழலிலும் ஷம்சி அசத்துவது, தென் ஆப்ரிக்கா அணிக்கு மேலும் வலுசேர்க்கிறது. இரண்டு அணிகளும் இதற்கு முன்பு 7 முறை நேருக்கு நேர் மோதியதில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இருப்பினும் இதுவரை உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் இறுதியை எட்டியிராத அணி என்பதால் தென்னாப்பிரிக்காவுக்கு மனதளவில் சற்று பலவீனம் எனலாம்.
இன்று போட்டி நடைபெற உள்ள பார்படாஸ் மைதானத்தில் 80 விழுக்காடு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் தடைப்பட்டாலும், ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளதால், நாளை போட்டி நடைபெறும். எனவே, முதன் முறையாக கோப்பையை முத்தமிட தென் ஆப்ரிக்காவும், 17 ஆண்டுகளுக்கு பிறகு T20 கோப்பையை கைப்பற்ற இந்தியாவும் களமாடுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை…