ஓமானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா

ஓமானுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியா 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டி பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் அடம் ஸம்ப்பா சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களைப் பூர்த்திசெய்து மைல்கல் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

மாக்கஸ் ஸ்டொய்னிஸில் அபார சகலதுறை ஆட்டம், டேவிட் வோனரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. முன்வரிசை வீரர்கள் ட்ரவிஸ் ஹெட் (12), அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (14), க்ளென் மெக்ஸ்வேல் (0) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

அவுஸ்திரேலியா 9ஆவது ஓவரில் 3 விக்கெட்ளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

டேவிட் வோனர், மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டனர்.

மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் வோனர் 56 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மெஹ்ரான் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

165 ஓட்டங்கள் என்ற கடுமையான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அயான் கான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட மெஹ்ரான் கான் (27), அணித் தலைவர் ஆக்கிப் இலியாஸ் (18), ஷக்கீல் அஹ்மத் (11) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.