T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி (27) இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியல் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அஸ்மதுல்லா 10 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதில் குர்பாஸ், நபி மற்றும் நூர் அகமது ஆகியோர் ஓட்டம் ஏதும் எடுக்கவில்லை.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன் மற்றும் ஷம்சி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். அந்த அணி 13 ஓட்டங்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்திருந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. அதற்குக் காரணம் அதில் இருந்த புற்கள் என வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தனர்.
T20 உலகக் கிண்ண அரையிறுதியில் ஆப்கானிஸ்தானின் 56 ஆல் அவுட் குறைந்தபட்ச ஓட்டங்களாக அறியப்படுகிறது. அதே போல ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச T20 கிரிக்கெட்டில் எடுத்த குறைந்தபட்ச ஓட்டங்களாகவும் இது உள்ளது. மேலும், ICC இன் முழு நேர உறுப்பினர்களாக உள்ள அணிகள் T20 உலகக் கிண்ணத் தொடரில் எடுத்துள்ள குறைந்தபட்ச ஓட்டங்களில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 2021 எடிஷனில் துபாயில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 55 ஓட்டங்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
57 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா விரட்டியது. டிகாக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஃபரூக்கி வீசிய 2ஆவது ஓவரில் 5 ஓட்டங்களில் போல்ட் ஆனார் டிகாக். அதன் பின்னர் கவனமாக ஆடிய கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் இணையர், அணியை வெற்றி பெற செய்தனர்.
8.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா. மார்க்ரம் 23, ஹென்றிக்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான நாளாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.