T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற கடைசி லீக்கில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான்- குர்பாஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இப்ராஹிம் சத்ரான் 29 பந்துகளில் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 12 பந்துகளில் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்துகளில் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 16 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 88 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது. இதற்கு குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்து வரும் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட கூடிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே வந்த வேகத்தில் அனைவரும் பெவிலியன் திரும்பினர். கடைசியில் ரஷித்கான் 3 சிக்சர்களை பறக்கவிட்டதால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை ஒடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.
இந்த நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் அரை சதம் அடித்து விளையாடினார். இறுதி வரை போராடிய லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
இதனால் பங்களாதேஷ் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வரலாற்று வெற்றியுடன் அரை இறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்