- இந்நாட்டு மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்து நோக்கில் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் இலங்கையில்!
தெற்காசியாவில் அதிநவீன எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கை மாணவர்களுக்கு ‘Cambridge Climate Quest’சுயக் கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இலங்கையில் அவுஸ்திரேலிய பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் ஒன்று நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்கு கிட்டியுள்ளது.
அதற்கமைய, தரம் 8 -12 வரை கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு, 3 மொழிகளிலும் “கேம்பிரிட்ஜ் காலநிலை குவெஸ்ட்” (Cambridge Climate Quest) சுயக் கற்கை நெறியை இலவசமாகக் கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, காலநிலை மற்றும் நிலைத்தன்மை தொடர்பான அறிவை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சீடு (Cambridge University Press and Assessments) மற்றும் மதிப்பீடுகளின் பணிப்பாளர் கிறிஸ்டின் ஓஸ்டன் (Christine Ozden), அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதோடு, இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
காலநிலை மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் முன்னணியில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையான ‘Cambridge Zero’ கல்வியாளர்களால் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றிகரமாக பாடநெறியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் சான்றிதழும் வழங்கப்படும்.
அத்துடன், இலங்கை மாணவர்களுக்கான சர்வதேச மட்ட உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகமொன்றும் இலங்கையில் நிறுவப்படவுள்ளது.
பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கொலின் ஸ்டிர்லிங் (Professor Colin Stirling) அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இது குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகமானது பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிக முகாமைத்துவம், நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கும்.
ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழும்பு, கேட்வே சர்வதேச பாடசாலை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஹர்ஷ ஆகியோரும் இந்த சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.