T20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக வெளியேறிவிட்ட நிலையில், ஆந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் மனவலியுடன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2009ல் இடம் பிடித்தார் டேவிட் வார்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமான டேவிட் வார்னர், அதன்பிறகு 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8,786 ரன்களை அடித்துள்ள அவர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 6,932 ரன்களை சேர்த்துள்ளார். அதேபோல், 110 T20 போட்டிகளில் அதிரடி காட்டியுள்ள அவர், 3,278 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 49 சதங்களை அடித்துள்ள டேவிட் வார்னர், ஹைடன், கில்கிறிஸ்ட் போன்றவர்களின் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த தொடக்க வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
மைதானத்தில் சாகசம் காட்டும் டேவிட் வார்னர், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார். கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்மித் உடன் சேர்ந்து டேவிட் வார்னரும் சிக்கிக் கொண்டார். இதனால், இருவருக்கும் தலா ஒரு ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
அந்த தடையில் இருந்து மீண்டு வந்த டேவிட் வார்னர், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார். 2015 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என பல்வேறு கோப்பைகளை ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் வென்று கொடுத்துள்ளார்.
37 வயதாகும் டேவிட் வார்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெறுவதாக அடுத்தடுத்து அறிவித்தார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்காக, டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வந்தார். லீக் சுற்றில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தது.
அதன்பின்னர் இந்தியாவுடனான போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என நினைத்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த போட்டியில் வார்னர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே, T20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்த டேவிட் வார்னருக்கு அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால், அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பை ஆஸ்திரேலியா பறிகொடுத்தது. இதையடுத்து, மன வலியுடன் T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார் டேவிட் வார்னர்.