ஷாருக்கான் நடிக்க உள்ள படத்தில் சமந்தா இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான், பதான் மற்றும் டங்கி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.
ஒட்டுமொத்தமாக இந்த மூன்று படங்களும் சுமார் 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. ஒரே ஆண்டில் எந்த ஒரு இந்திய கதாநாயகனுக்கும் இந்த அளவு கலெக்ஷன் ஏற்பட்டது கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. இந்த 3 படங்களில் குறிப்பாக ஜவான் படத்தை தமிழ் சினிமா இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார்.
இந்த படம் மட்டுமே 1,150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவந்த டங்கி படத்தை இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்தார். இவர் முன்னதாக பிகே, முன்னாபாய் எம்.பி.பி.எஸ் போன்ற படங்களை கொடுத்தவர்.
இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானியுடன் ஷாருக்கான் தனது அடுத்த படத்தில் இணைய உள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆக்ஷன் மற்றும் தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.