• 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்.
• மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு.
• மக்களுக்கு “உரிமை” வழங்கப்பட வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள்.
• திருகோணமலை முக்கிய ஏற்றுமதி மையமாக அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி.
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் (22) நடைபெற்றது.
இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.
இதன்பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
‘’திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த போது அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், வெருகலாறு முதல் அறுகம்பே வரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோட்டையை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத் துறைக்காக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சிறந்த ஹோட்டல் கிடைக்கும்.
மேலும் இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும்.
கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது.
நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாங்கள் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டோம். இந்நாட்டின் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்.
அதன்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கும் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இப்போது உங்களுக்கு ஒரு நிலத்தின் சட்டபூர்வ உரிமை உள்ளது. யாரும் அடிபணிந்து வாழத் தேவையில்லை. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு “அஸ்வெசும” நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தினோம். தற்போது விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தக் காணி உறுதிப்பத்திரங்களை வினைத்திறனாக வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் தயாரித்துள்ளோம்.
அப்போது, இந்த காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மாவட்ட செயலகத்திற்கோ பிரதேச செயலகத்திற்கோ செல்லத் தேவையில்லை. மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று காணி உறுதிகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வார்கள். எதிர்வரும் திங்கட்கிழமை அந்த வேலைத்திட்டத்தை தொடங்கி விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது. அந்த உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,
‘’இன்று ஜனாதிபதி ரணில்விகரமசிங்கவை வரவேற்பதில் பெருமைகொள்கிறோம். இந்தத் திட்டம் அவரால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூற வேண்டும். அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் வழங்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்று, இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ரணில் விக்ரமசிங்க அவர்களே இன்று ஜனாதிபதியாக இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி எப்பொழுதும் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய திணைக்களத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவான விவசாயிகளைக் கொண்ட விவசாய மாவட்டம் என்பதைக் கூற வேண்டும். அத்துடன் நாட்டின் மிக நீளமான கடற்கரை கிழக்கு மாகாணத்தில் அமைந்திருப்பதால் நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பத்தை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி எமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். எனவே, மீன்வளர்ப்புத் திட்டங்களுக்கு உள்நாட்டு விவசாயிகள் மற்றும் வர்த்தகங்களை ஊக்குவிக்க நாம் தற்போது செயற்பட்டு வருகிறோம். மேலும், எங்களிடம் அதிக அளவில் கணிமப் படிவுகள் உள்ளது. அதற்கு பெறுமதி சேர்த்து, கனிமத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டங்கள் அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் மிகவும் ஊக்கத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.’’ என்று ஆளுநர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா,
‘’மட்டக்களப்பு மக்களுக்கான புதிய மாவட்ட செயலக கட்டிடத் திறப்பு விழா, காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வருகை தந்தமை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இப்போதெல்லாம் தேர்தல் பற்றித்தான் எல்லோரும் கதைக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். மேலும் அரசியல் தலைவர்கள் யாழ்ப்பாணம் சென்று தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றனர். தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உங்களால்தான் அனைவரும் அந்தக் கருத்துக்கு வந்ததில் பெருமை கொள்கிறோம்.
போரினால் நாம் இழந்தது ஏராளம். இனி இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது நமது பொறுப்பு. இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், என அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு நாடு உருவாகும் என இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் அதிகாரத்தை வழங்கினால், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.’’ என்று தெரிவித்தார்.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
நாடு மிக மோசமான பொருளாதார சிக்கலில் இருந்தபோது நாட்டைப் பொறுப்பேற்று ஜனாதிபதி பல கொள்கைகளை அமுல்படுத்தியுள்ளார். இந்தக் கொள்கைகள் நீடித்து நிலைக்க வேண்டுமாயின், மக்களும் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக சம்பள உயர்வுகளைக் கோரி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாடு மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும்போது, எவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்குவது, சம்பள உயர்வுகளை வழங்குவது என்ற கேள்வி இருக்கிறது.
இந்த நாட்டை கட்டியெழுப்பி, எதிர்கால இளைஞர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். இன்னமும் கடன் வாங்கி பயணிக்கப் போகிறோமா, அல்லது நாட்டை சரியாக நிர்வகித்து, சரியான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். தூரநோக்குடன் செயல்பட்டு, பொருளாதாரத்தில் நீடித்து நிலைக்க நாம் பணியாற்றி வருகிறோம். இந்த நிலைமையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் மண்ணோடும், கடலோடும் சொந்தப் பொருளாதாரத்தில் நிற்கும் ஒரு மாவட்டம். இங்கு நீர்ப்பாசனத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான பணிப்புரைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதனால் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றிய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். இதனைத்தவிர மாற்று வழிகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உறுதியான தளம் இல்லாமல் நாங்கள் கட்டிடம் கட்ட முடியாது. எனவே, அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக நல்ல தலைவரை மக்கள் தெரிவுசெய்வார்கள் என்று நம்புகிறேன்.’’ என்று தெரிவித்தார்.
வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,
‘’எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி பலருக்கும் அழைப்பிவிடுத்தார். யாரும் இந்நாட்டைப் பொறுப்பேற்ற முன்வரவில்லை. அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் கையில் பணம் இருந்தாலும் வரிசைகளில் பல நாட்கள் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டது. இந்த நாடு மீண்டும் மீண்டுவரக்கூடிய சூழல் இருக்கவில்லை. அந்நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக முன்வந்து, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்ப நாட்டைப் பொறுப்பேற்றார்.
இருட்டைத் திட்டுவதற்கு பலர் இருந்தாலும் இருட்டை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர ஒருவர் தேவை. அந்த ஒருவராக ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். அவரின் தலைமைத்துவத்தடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டு முயற்சியால் படிப்படியாக பொருளாதாரம் எழுச்சி கண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
நாடளாவிய ரீதியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் பாரிய திட்டத்தை ஜனாதிபதி செயற்படுத்தி வருகின்றார். இதுவரை வசித்து வந்த காணிகளுக்கு உரிமையற்றவர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த உரிமை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இன்று ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டம் கல்வித்துறையில் மேலும் வளர்ச்சியடையும்.’’ என்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச். இ. எம். டபிள்யூ. ஜி. திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.