ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பம் 

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

இதன்படி, மாதாந்தம் 67,500 ரூபாய் கொடுப்பனவுடன் ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி,

“சுதேச வைத்திய அமைச்சு என்ற வகையில் நாம் இதுவரை பெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து சித்தியடைந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் தொழிற்பயிற்சி தாமதமானது. அதன்படி, ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி பட்டதாரிகள் 207 பேருக்கு 67,500 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவுடன் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 153 பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படும். அதன்படி 418 பட்டதாரிகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது.

சுதேச வைத்திய அமைச்சும், ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து தற்போது பாரம்பரிய வைத்தியர் பதிவுகளை எமது நாட்டில் விரிவுபடுத்தி வருகின்றன. அதன்படி, எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை பதிவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் உள்ளது.

தற்போது பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. கடமைகளை நிறைவேற்றுவதை விடுத்து தமது சலுகைகளுக்காகவே செயற்படுகிறார்கள் என்றே கூற வேண்டும். இப்படிப்பட்டவர்கள் நாட்டின் எதிர்காலத்தை இருளாக்குகிறார்கள்.

மேலும், நம் நாடு ஜப்பான் போன்று மாற வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜப்பானியர்களைப் போல செயற்பட விரும்புவதில்லை. அவுஸ்திரேலியாவில் உள்ளது போன்ற கல்வி முறை இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பது போன்ற பல்கலைக்கழகங்களை இங்கே நிறுவ விரும்பவில்லை.

எமது பெற்றோர் தமது சொத்துக்களை விற்று பிள்ளைகளின் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர். இதற்குக் காரணம், நம் நாட்டில் பல்வேறு மாணவர் சங்கங்கள், மாணவர் போராட்டங்களை நடத்தி கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதில்லை. எனவே இவ்விடயத்தில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்” என்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மேலும் தெரிவித்தார்.